“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Monday, January 31, 2022

புலம் விற்பனை உரிமை


 ஓநாய் குலச்சின்னம் (நாவல்) - ஜியாங் ரோங்

தமிழில்: சி.மோகன்

விலை ரூ.500

மங்கோலிய மேய்ச்சல்நில நாடோடி மக்களின் மகத்தான நாகரிகம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதல்களால் மறைந்துபோன அவலம் பற்றிய நாவல் ‘ஓநாய் குலச்சின்னம்’.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர் கொண்டிருந்த மேய்ச்சல் நிலம் என்ற பெரிய உயிர் சில ஆண்டுகளுக்குள்ளாகப் படுகொலை செய்யப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைவு.

ஓநாய் குலச்சின்னமானது மேய்ச்சல் நிலத்தின் ஆன்மா. மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் ஞான குருவாகவும், போர்க் கடவுளாகவும், மேய்ச்சல்நிலக் காவலனாகவும், குலச்சின்னமாகவும் விளங்கிய ஓநாய்கள் ‘புரட்சிகர நடவடிக்கை’கள் மூலம் அழித்தொழிக்கப்பட்டு மேய்ச்சல்நில ஆன்மா சிதைவுற்ற கதை.

மேய்ச்சல்நில ஓநாய்களின் வசியத்திற்கு ஆட்பட்டு ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்த்த ஒரு சீன இளைஞனின் பார்வையில் உருவாகியிருக்கும் படைப்பு.

2004ஆம் ஆண்டு வெளியான இந்தச் சீன நாவல் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சீனாவில் 

நாற்பது லட்சம் பிரதிகள் விற்பனையானது. 

இங்கு, புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர். மற்றவை சிறிய உயிர்கள். அவை உயிர் வாழ்வதற்குப் பெரிய உயிரையே சார்ந்திருக் கின்றன. ஓநாய்களும் மனிதர்களும்கூட சிறிய உயிர்கள்தான். புல்லைத் தின்னும் ஜீவன்கள், இறைச்சி உண்ணும் ஜீவன்களைவிட மோசமானவை.  உன்னைப் பொறுத்தவரை மான்கள்மீது இரக்கம் காட்டவேண்டும். புல்மீது இரக்கம் காட்ட வேண்டியதில்லை, அப்படித்தானே? மான்களுக்குத் தாகம் ஏற்படும்போது அவை தண்ணீர் குடிக்க நதிக்கு விரைகின்றன. குளிரெடுத்தால் மலையில் ஒரு இதமான இடத்துக்கு ஓடிக் குளிர்காய்கின்றன. ஆனால் புல்? புல் பெரிய உயிர். எனினும் அது மிக எளிதாகச் சிதையக்கூடிய மிகப் பரிதாபகரமான உயிர். அதன் வேர்கள் ஆழமற்றவை. அதன் மண் மிக லேசானது. அது நிலப்பிரதேசத்தில்தான் வாழ்கிறது என்றாலும் அதனால் ஓட முடியாது. எவரும் அதன்மீது ஏறி மிதிக்கலாம்; உண்ணலாம்; மெல்லலாம்; கசக்கலாம். குதிரை அதன் பெரும்பரப்பில் மூத்திரம் அடிக்கலாம். அது மணலிலோ, பாறைப் பிளவுகளிலோ முளைத்து வளர்ந்தால் இது இன்னும் குறைந்த நாட்களே உயிர் வாழும். அவை பூப்பதில்லை என்பதால் அவற்றால் தம் விதைகளைப் பரப்ப முடியாது. மங்கோலியர்களாகிய எங்களைப் பொறுத்தவரை புல்லை விட வேறெதுவும் எங்களுடைய இரக்கத்துக்கு உரியதல்ல.

நாவலிலிருந்து



ஜியாங் ரோங்

1946ஆம் ஆண்டு ஜியாங்சூ-வில் ஜியாங் ரோங் பிறந்தார். அவருடைய தந்தையின் வேலை நிமித்தமாக, அவர்களுடைய குடும்பம் 1957இல் பீஜிங்கிற்குக் குடிபெயர்ந்தது. 1966இல் ‘சென்ட்ரல் அகாதெமி ஆஃப் பைன் ஆர்ட்’இல் ஜியாங் கல்வி மேற்கொண்டார்.

கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து, சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, அவருடைய படிப்பு இடையிலேயே தடைப்பட்டது. அவருடைய இருபத்தோராவது வயதில் -  1967இல் - உள்மங்கோலியாவின் ‘கிழக்கு உஜிம்கியுன் பேனர்’இல் அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து உழைப்பதற்காக அனுப்பப்பட்டார். அங்கு அவர் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்தார்.  அங்கிருந்த காலத்தில் மங்கோலிய வரலாறு, கலாசாரம், மரபு ஆகியவற்றைத் தீர்க்கமாக அறிந்துகொண்டார். குறிப்பாக, மேய்ச்சல்நில ஓநாய்கள் பற்றிய புராணீகங்களை அறிவதில் தீவிர நாட்டமும் வேட்கையும் கொண்டிருந்தார். ஓய்வுநேரங்களில் அவை பற்றிய கதைகளைக் கேட்டறிந்ததோடு, மேய்ச்சல்நில மக்களின் ஆசானும் குலச்சின்னமுமான ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க்குட்டியை எடுத்து வளர்க்கவும் செய்தார்.

1978இல் பீஜிங் திரும்பி, ‘சமூக அறிவியல்களுக்கான சீன அகாதெமி’யில் தன் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர், தன் வாழ்வைக் கல்வித் துறையாளராக அமைத்துக்கொண்டார். 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

1999இல் இந்நாவலை எழுதத் தொடங்கி 2003இல் எழுதி முடித்தார்.



புலம் புதிய வெளியீடுகள்


 மாயக்கண்ணி (சிறுகதைகள்) - ஆதிரன்

விலை ரூ.150

அகமும் புறமுமாக இடையறாது தொடரும் மனத்தின் உரையாடல்களை யதார்த்தத் தளத்திலும் மிகு புனைவு வெளியிலும் நமக்குள்  ஊடாடச் செய்கின்ற ஆதிரனின் கதைகளில், மையப் பாத்திரங்கள் செயல்படும் அகவெளியைத் தீர்மானிப்பவர்களாகப் பெண்கள் இருக்கின்றார்கள். 

ஒழுங்கிற்கும் ஒழுங்கற்றவைக்குமான முரண்களில் சஞ்சரிக்கும் மானுட இயல்பு இவையிரண்டுமற்ற வெளியொன்றில் பயணிக்க எத்தனிக்கையில் நேர்கிற ஊடாட்டம் வாழ்வின் நெடும்பயணத்திற்குமானது. இந்தக் கதைகள் கனவுலகிற்கும் யதார்த்தத்திற்குமான இயல்புக்கும் இயல்பற்றதற்குமான இடைவெளியில் வாய்க்கின்ற வாழ்வியக்கத்தைச் பேசுகின்றன.