“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Tuesday, April 7, 2020

புலம் புதிய வெளியீடு

மக்கள் தெய்வங்கள் (நாட்டார் தெய்வங்களின் கதைகள்) - கோ.பழனி
விலை ரூ.160


நம்பிக்கைகளையும்  சடங்குகளையும் பிரித்தெடுக்க முடியாப் பண்பாட்டுவெளியில்,  வாய்மொழியாகச் சொல்லப்பட்டு நிலங்களெங்கும் திரிபுகளடைந்து காற்றில் மிதந்துகொண்டிருக்கும் இத்தெய்வக் கதைகள், மக்களுள் மக்களாக வாழ்ந்து மறைந்த எளியவர்களின் கதைகள். வழிபாட்டுக்குரிய மனிதர்களின் கதைகள். மனிதர்கள் தெய்வமாக்கப்பட்டதன் கதைகள். இக்கதைகள் எளிய மக்களின் நிலவெளியில் நிகழ்ந்தவை. காலங்களைக் கடந்தும் அந்நியப்படாமல் அவர்களின் வாழ்வோடு பிணைந்து கிடப்பவை.. எழுத்தில் வருவதன் மூலம் இக்கதைகள் பெரும் மக்கள் பரப்பை அடையும் சாத்தியம் கொண்டவை. 

புலம் புதிய வெளியீடு

வகுப்பறையின் கடைசி நாற்காலி (சிறந்த கல்வி நூல்) - ம.நவீன்
விலை ரூ. 70

புலம் புதிய வெளியீடு

தாய் (உலக கிளாசிக் நாவல்) - மக்சீம் கார்க்கி - தமிழில்: தொ.மு.சி. ரகுநாதன்
விலை ரூ.300


1907இல் முதன்முதலாக வெளியான தாய் நாவல் உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் கம்யுனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தைக் காலமாகவும், புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களைக் கொண்ட தொழிற்சாலையைக் கதைக்களமாகவும் கொண்ட இப்புதினம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.
பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாகத் தன் நிலையிலிருந்து எப்படித் தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையைப் புரிந்துகொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படிக் கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்கச் சொல்லுவதோடு நம்மையும் அந்தத் தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்
.


புலம் புதிய வெளியீடு

அயோத்திதாசரும் சிங்காரவேலரும் (நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்)
வெளிவராத விவாதங்கள்
தொகுப்பும் பதிப்பும்: ஸ்டாலின் ராஜாங்கம்
விலை ரூ.110

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ்ப் பகுதியில் உருவான பௌத்த மறுமலர்ச்சி குறித்தும், அவற்றில் செயல்பட்டவர்களிடையே இருந்து வந்த கருத்து நிலைகள், அவை சார்ந்த விவாதங்கள் குறித்தும் அறியத்தக்க கருத்துகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பௌத்தம் தொடர்பான விவாதங்கள் மட்டுமல்லாது, அக்காலச் சூழலில் உருவான பௌத்த சங்கங்களின் நிர்வாகம் தொடர்பான செய்திகளும் இத்தொகுப்பில் உள்ளன. இவை சாக்கைய பௌத்த சங்கத்தின் சார்பாக அயோத்திதாசரும் (1845-1914) மகாபோதி சங்கத்தின் சார்பாக ம.சிங்காரவேலரும் (1860 - 1946) நடத்திக்கொண்ட விவாதங்களாகும். இவ்விவாதங்கள் அயோத்திதாசர் நடத்திய தமிழன் (1907-1914) ஏட்டிலிருந்து தொகுக்கப்பட்டு முதன்முறையாக நூலுருப்பெறுகின்றன.

புலம் புதிய வெளியீடு

சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் - அ.மார்க்ஸ்
விலை ரூ.80

புலம் புதிய வெளியீடு

புதிய ஈரானிய சினிமா (கட்டுரைகள்) - தொகுப்பு: சஃபி
விலை ரூ.200

புலம் புதிய வெளியீடு

உலகின் நாக்கு (கட்டுரைகள்) - ம.நவீன்
விலை ரூ.120

பல கட்டுரைகளில் நவீனின் நோக்கு என் நோக்குக்கு மிக அருகே வருகிறது. ஏனென்றால் அது புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தரராமசாமி எனத் தொடர்ந்து வரும் ஒரு நவீன இலக்கியப் பார்வைதான். அது பொது உண்மைகளைத் தவிர்த்து இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் தனியுண்மைகளைக் கவனிக்கும். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கடந்து மானுட விசித்திரங்களையும் மானுட உன்னதங்களையும் நோக்கும்.
காட்டில் யானை செல்லும் பாதை உண்டு. எலிகள் செல்லும் பாதை கீழே. பறவைகள் செல்லும் பாதை மேலே. எங்கும் செல்லும் பாதை என்பது காற்றின் வழி. அதுவே இலக்கியத்திற்குரியது.
உயிர்ப்புள்ள ஓர் இலக்கிய ரசிகன் தனக்குள் இருப்பதை இக்கட்டுரைகள் வழியாக நவீன் காட்டுகிறார். தான் எனக் கோத்துக்கொண்டிருக்கும் தன்முனைப்பை அகற்றித் தான் என உணரும் தானறியாத் தன்னிலை ஒன்றைப் புனைவுகள் முன் வைக்கவும் புனைவுக்குள் கரைந்து உட்செல்லவும் மீண்ட பின் தான் கண்டவற்றைத் தன் மொழியில் தன் அனுபவமாக முன்வைக்கவும் அவரால் முடிந்துள்ளது.
இந்த ரசனை அவரை வாழ்நாளெல்லாம் வழி நடத்தட்டும்.
 - ஜெயமோகன்

புலம் புதிய வெளியீடு

குழந்தைகளைப் புகழுங்கள் (சிறுவர் கதைகள்) - சி. முத்துகந்தன்
விலை ரூ.60

புலம் புதிய வெளியீடு

இன்னும் கேட்கலாம் (சிறுவர் பாடல்கள்) - சி. முத்துகந்தன்
விலை ரூ.60

புலம் புதிய வெளியீடு

கள்ளிமடையான் (சிறுகதைகள்) - க. மூர்த்தி
விலை ரூ.140
புலம்

கன்னு விடுதல் என்கிற சொற்களிலிருந்துதான் இத்தொகுப்பை படிப்பதற்குப் புகுந்தேன். பால் பீச்சுவது / கறப்பது என்றல்லாமல் மாட்டின் பாலில் கன்றுக்கே முதலுரிமை என்கிற ஆழ்ந்த பொருளிலான ‘கன்னு விடுவது’ என்கிற இச்சொற்கள் என் பால்யகாலத்துச் சித்திரம் ஒன்றை மீட்டுக் கொடுத்தது போன்ற உணர்வை உண்டாக்கின. வேளாண்குடி வாழ்வியலின் நினைவுகளை மட்டுமல்லாது எங்களது தாத்தம்மாள் காலம்வரை எங்கள் குடும்பத்தின் தொழிலாக இருந்த ஜல்லி உடைப்பது தார் ரோடு போடுவது பற்றிய நினைவுகளையும் கிளறிவிட்டவை இக்கதைகள்.

ஆதவன் தீட்சண்யா

புலம் புதிய வெளியீடு



சாமானிய மனிதனின் எதிர்க்குரல் (கட்டுரைகள்) - விஜய் மகேந்திரன்

விலை ரூ.130


விஜய் மகேந்திரனின் இத்தொகுப்பு விதவிதமான கதைகளை சுமந்து அலையும் மனிதர்களை நமக்கு பரிச்சயப்படுத்துகிறது. ஐந்து நிமிட வாசிப்பினில் அவர் வெவ்வேறு ஆளுமைகளையும் அவர்களுடனான நினைவுகளையும் வாசகருக்கு சொல்லிவிடுகிறார். திரைத்துறை சார்ந்தவை, வாழ்வியல் சார்ந்தவை, இலக்கியம் சார்ந்தவை என இந்த நூலின் உள்ளடக்கத்தை மூன்றாக வகுக்கலாம். ஸ்ரீதேவி, ரேகா, ரஹ்மான், பிரசன்னா, எடிட்டர் லெனின், களஞ்சியம், ராம்பால், கேபிள் சங்கர், கீரா, சாம்ஸ், மீரா கதிரவன் என பல திரைத்துறையினரை பற்றிய தன் அவதானிப்புகளையும் அவர்களுடனான உறவையும் பற்றி சுவாரசியமாக எழுதியிருக்கிறார். இவைத் தவிர்த்து ‘மூன்று முடிச்சில்’ வெளிப்பட்ட ரஜினியின் நடிப்பு, முருகேசபாண்டியனின் சினிமா நூல் குறித்த அறிமுகம்,  யுவ கிருஷ்ணாவின் நடிகைகள் பற்றிய நூல் அறிமுகம் என சினிமாவின் வெவ்வேறு தளங்களை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
விஜய் மகேந்திரனின் வாசிப்பு வேட்கையை பறைசாற்றுவதாகவும் இத்தொகுப்பு உள்ளது. இளங்கோ கிருஷ்ணன், நரன், குமரகுருபரன், ஷோபா சக்தி, நிலா ரசிகன், லீனா மணிமேகலை, கிராபியன் ப்ளாக், பிரியா தம்பி, விஜயபத்மா, அனிதா, சுதேசமித்திரன் என பல்வேறு எழுத்தாளர்களின் ஆக்கங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார். கவிதைகள் தேர்வும் அது குறித்து அவர் எழுதும் குறிப்புகளும் சிறப்பாக உள்ளன.
இவையிரண்டும் தவிர்த்து வாழ்வியல் பற்றிய கட்டுரைகள், குறிப்பாக சென்னை நகரத்தின் சூழ்ச்சி மிகுந்த வாழ்வு வசப்படாமல் போகும் புதிர்களை விவரிக்கும் கட்டுரை அபாரமானவை. மொழி ரீதியாகவும் தனித்து விளங்குபவை. ஆட்டுக்கால் சூப்பு பற்றிய கட்டுரை ஒரு சிறுகதைக்கு உரியது. உப்புகண்டம், முருங்கைக்கீரை, ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவை அவருடைய மருத்துவ பின்புலத்துடன் சேர்ந்து துலங்குகிறது. மொத்தத்தில் இவை ஒரு அமர்வில் தொடர்ச்சியாக வாசிக்கத்தக்கதாக வடிவம் கொண்டுள்ளது.
- சுனில் கிருஷ்ணன்

Monday, April 6, 2020

புலம் புதிய வெளியீடு

நகரத்திற்கு வெளியே (சிறுகதைகள்) - விஜய் மகேந்திரன் 

விலை ரூ.120
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்களின் வாழ்வியலைத் தன் கதைகளில் மையப்படுத்தும் விஜய் மகேந்திரன் மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு, 'இருள் விலகும் கதைகள்' என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். பிஸியோதெரபி  துறையில் பணியாற்றிய இவர், இப்போது ஊடகத் துறையில் செயல்பட்டுவருகிறார்.

அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராக உள்ள இவரது  முதல் சிறுகதைத் தொகுப்பு, 'நகரத்திற்கு வெளியே'. 2011ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன்  படைப்பிலக்கிய  விருதை இத்தொகுப்பு பெற்றுள்ளது. சிறந்த விமர்சகருக்கான (2015)  'படி'அமைப்பின் விருதைப் பெற்றுள்ள இவரது நாவல், 'ஊடுருவல்'. '.ஆர்.ரஹ்மான் - நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்' என்ற இவரின் நூலை மின்னம்பலம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ''சாமானிய மனிதனின் எதிர்க்குரல்'' இவருடைய கட்டுரை நூல்.


புலம் புதிய வெளியீடு


ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம் - விஜய் மகேந்திரன்
விலை ரூ.150


".ஆர்.ரஹ்மான்: தமிழ் இசையின் புதிய சரித்திரம்" படித்தேன்.வாசகனின் தோள் மீது கை போட்டு நடக்கும் மொழிநடை, நிறைய தகவல்கள் இசை பற்றி, ரஹ்மான் வாழ்வைச் சொல்வது போல அவர் காலத்து சினிமா உலகையே பேசி விடும் லாவகம் கைகூடி இருக்கிறது . இந்த நூலுக்கு  best seller ஆகிவிடும் வாய்ப்பு இருக்கிறது . சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள் இதை ஒரு சுய முன்னேற்ற புத்தகமாகக் கூட நினைத்து படிக்கலாம்.
- கவிஞர் இந்திரன்

நான் கல்லூரி காலத்தில் இருந்து இளையராஜா அளவுக்கே ரஹ்மானின் வெறியனாகவும் மாறினேன்.இசைப்புயலின் இசை வசீகரத்தை தன் வார்த்தைகளால் எழுதி வசீகரித்திருக்கிறார் விஜய் மகேந்திரன் இந்த புத்தகம் நெடுக...இசைப்புயல் பற்றி நிறைய தகவல்கள்...இந்த புத்தகத்தை வாசித்தவர்களுக்கு  இசைப்புயல் குறித்து இன்னொரு புரிதல் கிடைக்கும்.
- எழுத்தாளர் என்.ஸ்ரீராம்

புலம் புதிய வெளியீடு

திரை ஆளுமைகளும் நானும் (கட்டுரைகள்) - தி. குலசேகர்
விலை ரூ.260

முகநூலில் என்னுடைய திரைப்பட அனுபவங்களைப் பதிவுசெய்யும் விதத்தில், நான் பணியாற்றிய திரைப்படக் கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை அவ்வப்போது எழுதிப் பதிவிடுவதுண்டு. அதை உடனுக்குடன் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டும் விதத்தில் நண்பர் விஜய் மகேந்திரன் நேரம் மறந்து உரையாடியிருக்கிறார். அப்படியான கட்டுரைகளுக்கு முகநூலில் இத்தனை வரவேற்புக் கிடைத்தது எதிர்பார்க்காதது. அவை, பல தோழமைகளை, திரை ஆளுமைகளை நட்பு வட்டத்திற்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. இப்போது ‘திரை ஆளுமைகளும் நானும்’ என்ற தலைப்பில் உங்கள் கையில் தவழ்கிறது.

புலம் புதிய வெளியீடு

அருண்மொழி
எனும் திரைக்காதலன்
தொகுப்பாசிரியர்
தி. குலசேகர்
விலை ரூ.110

புலம் புதிய வெளியீடு

புத்தர்
இளமை ததும்பும் புத்தம்
வாழ்க்கை வரலாறு
தி. குலசேகர்
விலை ரூ. 55

புத்தம் என்றால் ஞானம்.
ஞானம் என்றால் கருணை
மற்றும் நுண்ணுணர்வு.

புலம் புதிய வெளியீடு


லெனினின் வாழ்க்கைக் கதை
(நவீனம்)
மரீயா பிரிலெழாயெவா
தமிழில்: பூ.சோமசுந்தரம்
விலை ரூ. 280

மானுட சமூகத்தின் ஒட்டுமொத்த மீட்சிக்கான பாதையாக தன்னலமற்ற நெடிய போராட்டங்கள், அளப்பரிய தியாகங்கள், தீரம் மிக்க மாபெரும் கிளர்ச்சிகளின் மூலமாகத் தம் தேசத்தின் வாழ்முறைச் சித்தாந்தமாகப் புத்தொளியான பொதுவுடைமைச் சித்தாந்தத்தைச் செயலாக்கம் பெறச் செய்த தோழர் லெனின் வாழ்வின் மகத்தான தருணங்களை இந்நூல் விவரிக்கின்றது; உழைக்கும் மக்களை, எளியவர்களை இரக்கமற்ற முடியாட்சியின் பிடியிலிருந்து விடுவித்து, சமதர்மம் கொண்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக்குவதற்காக ஓயாது சிந்தித்த மனம், இடையறாது எழுதிய கரங்கள், வெண்பனி தூவும் பொழுதுகளில் களைப்பறியாது நடந்த பாதங்கள், விரிந்துகிடக்கும் உறைபனிப் பாறைகள் கொண்ட நிலத்தில் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கை, மாறுவேடங்கள், தண்டனைக் காலங்கள் எனத் தோழர் லெனின் கொண்ட இலட்சிய வேட்கை மிகு வாழ்வின் சாரத்தைக் காட்சிகளாக்கித் தந்திருக்கிறது. ஒப்பற்ற துணிவும், கட்டுப்பாடும் மிக்க ஒரு போராட்டக்காரரின் சாகசமிக்க வாழ்க்கைக் கதையை, அவர் கண்ட மானுடத்தின் மதிப்புமிகு கூறுகளை இப்புத்தகம் மிக அழகிய மொழியில் எடுத்துரைக்கின்றது.

புலம் புதிய வெளியீடு

கோமகனின் தனிக்கதை (சிறுகதைகள்) - கோமகன்
விலை ரூ. 150

“கோமகனின் தனிக்கதை சிறுகதைத் தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்குகின்றன. ஈழத்து வட்டார வழக்குடன் வழமையான ஈழத்து எழுத்தாளர்களின் கற்பனை நுட்பத்துடன் கோமகனின் தனிக்கதைகள் இடம்பிடித்துள்ளன. பெரும்பாலும் எழுத்தென்பது வாழ்வின் சிக்கலான போக்கை, அதன் தடுமாற்றங்களை இயல்பான போக்குடன் வாசகனுக்கு கொண்டு செல்வதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வாசகனின் வழமையான எதிர்பார்ப்புக்களை தகர்த்து நுட்பமாகப்  பயணிக்க வேண்டும். நல்ல கதையென்பது படித்து முடித்த பிற்பாடு வாசகனை சிறிதுநேரம் யோசிக்கவைக்கும். அதன் பாதிப்புக்கள் அவனுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டும். கோமகனின் இத்தொகுப்பில் சில சிறுகதைகள் அதற்கான தகமையைக் கொண்டிருகின்றன.
                               அனோஜன் பாலகிருஷ்ணன்

உலகின் முதல் ரகசியம் (கவிதைகள்) - கருணாகரன்


உலகின் முதல் ரகசியம்  (கவிதைகள்) - கருணாகரன்
விலை ரூ. 120

இந்தக் கவிதைகளின் புனைவு வெளியில் நீங்களும் இயற்கையும் இணைந்திருக்கிறீர்கள். கிளைத்து வினோதமாக விரிந்து செல்லும் இந்தப்  புனைவுப் பரப்பில் புதிய பாதைகள் தென்படுகின்றன. பழகிய வழிகள் தெரிகின்றன. ஆனால் வேறாக. எல்லாமே ஒரு கனவுபோல தெரியும் கணத்தில் சட்டென ஒரு மின்னல் தோன்ற நிஜம் விரிகிறது.  அதில் தெரிவதைக் கண்டுணரும்போது மையங்களைச் சிதைத்துச் செல்லும் இந்தக் கவிதைகளின் தீவிரம் உங்களுக்குள் மூட்டுகிறது பெருந்தீயை. கூடவே பொழிகிறது பெருமழையும் பனியும். சுழன்றடிக்கிறது புயல். சமநேரத்தில் படருகிறது பேரமைதி. இதற்குள்ளேயே இருக்கின்றன உங்களுடைய குரல்களும் கனவும் நம்பிக்கையின்மையும்  நம்பிக்கைகளும்.

மூன்று காதல் கதைகள்-இவான் துர்கேனிவ்-தமிழில்: பூ.சோமசுந்தரம்

மூன்று காதல் கதைகள் (நாவல்) - இவான் துர்கேனிவ் - தமிழில்: பூ.சோமசுந்தரம்
விலை ரூ. 350

துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகுகாலமாகத் திகழ்ந்துவருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதைமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறுநாவல்களிலிருந்தே அடிக்கடித் தொடங்குகிறார்கள். மனித உணர்ச்சிகளின் தன்னிகரற்ற உலகை இவற்றில் காண்கிறார்கள். துர்கேனிவ் வருணித்துள்ள நிகழ்ச்சிகள் நம் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை ஆயினும், நம் காலத்தவர்களையும் நேரடியாகப் பங்குகொள்ள வைக்கின்றன. ஏனெனில் என்றும் நிலைத்திருப்பவையும் அழிக்க முடியாதவையுமான, இயல்பான மனித உணர்ச்சிகளை இவை விவரிக்கின்றன.
- அர்தூர் தல்ஸ்தியகோவ்