“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Thursday, January 27, 2022

புலம் புதிய வெளியீடுகள்


வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன்
தமிழில்: எம்.கோபாலகிருஷ்ணன்

விலை ரூ.400

 மனிதகுலத்தின் வரலாற்றைப் புனைகதைகளாகச் சித்தரிக்கிறது இந்த நூல். எட்டாயிரம் ஆண்டுகளைக் கொண்ட நீண்ட கால அளவில், பத்தாயிரம் கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவுக்கு இந்தோ ஐரோப்பிய இனம் மேற்கொண்டிருக்கும் பயணத்தை சுவையான இருபது கதைகளாக விவரித்துள்ளார் ராகுல சாங்கிருத்யாயன். பனிப் பிரதேசத்தில் குகைகளில் வாழும் தாய்வழிச் சமூகத்தின் கதையில் தொடங்கி, இந்தியச் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் முடிவுறும் இந்த நூலில் உள்ள கதைகள் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படைகளைக் கொண்டு புனைவுகளாக எழுதப்பட்டுள்ளன. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தத்துவ நூல்கள், பயணக் கட்டுரைகள் என அனைத்துத் துறைகளிலும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கும் ராகுல சாங்கிருத்யாயனின் இந்த வரலாற்றுப் புனைவு, இந்தியாவில் எழுதப்பட்ட நூல்களில் சிறப்பும் தனித்துவமும் வாய்ந்ததாகும்.


ராகுல சாங்கிருத்யாயன்

(1893-1963) 

பயண இலக்கியத்தின் முன்னோடி. வாழ்நாளின் பெரும்பகுதியை பயணங்களுக்காகவே செலவிட்டவர். உருது, அரபி, தமிழ், கன்னடம், சிங்களம் உள்ளிட்ட பல மொழிகளிலும் புலமை பெற்றவர். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் என அனைத்துத்  துறைகளிலும் பங்களித்திருக்கும் அவரது சுயசரிதையான ‘என் வாழ்க்கைப் பயணம்’ மிகப் பிரசித்தி பெற்றது.

உத்தரப்பிரதேசத்தில் அசம்கருக்கு அருகில் பிறந்தவர். தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவர் பின்பு புத்த நெறியைத் தழுவினார். சில காலத்துக்குப் பின் மார்க்சியச் சிந்தனையில் ஈடுபாடு கொண்டார்.

வாழ்வின் இறுதிக் காலத்தில் சிங்களப் பல்கலைக்கழகத்தில்     கல்விப் பணியில் இருந்தபோது நோய்வாய்பட்டார். 1963ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் இயற்கை எய்தினார்.


எம்.கோபாலகிருஷ்ணன், இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘அம்மன் நெசவு’, ‘மணல் கடிகை’, ‘மனைமாட்சி’ ஆகிய நாவல்களும் ‘பிறிதொரு நதிக்கரை’, ‘முனிமேடு’, ‘சக்தியோகம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

நிர்மல் வர்மாவின் ‘சிவப்புத் தகரக் கூரை’ நாவலையும் திகார் சிறையில் இருந்த பெண்கள் எழுதிய கவிதைகள் அடங்கிய ‘துயர் நடுவே வாழ்வு’ தொகுப்பையும் இந்தியிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். 

பிரடெரிக் டக்ளஸின் ‘அடிமையின் வரலாறு’, சோல்செனிட்ஸென்னின் ‘வாழ்விலே ஒரு நாள்’, கதேயின் ‘காதலின் துயரம்’ ஆகிய நூல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். 



No comments:

Post a Comment