“ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
ஆகியவற்றை விட்டொழிப்பதே” - தந்தை பெரியார்

Friday, January 28, 2022

புலம் புதிய வெளியீடுகள்


 கமலி (நாவல்) - சி.மோகன்

விலை ரூ.150


“ஏக்கமும், தேடலும், விருப்புகளும், தேவைகளும், கனவுகளுமாகப் புதைந்து கிடக்கிற இந்த உடலின், மனதின் கதவைத் திறக்கும் திறவுகோல் எவரிடம் உள்ளதோ அவரிடம் நாமறியாமலே நம் ஒப்பனை கலைகிறது. உடலெங்கும் காமத்தின் பெருமரம் கிளைவிட்டுக் கிடக்கையில் கனிகளின் மீது மட்டும் அக்கறை கொள்வதாய் அமைந்துவிடுகிற வாழ்வில், சிறுதளிரையும், மொக்குகளையும், மலர்களையும், கிளை அமர் புள்ளினங்களையும், வீழும் இலைகளையும்  தரிசிக்கிற மனம் கிடைத்துவிட்டால் இந்த மனமாகிய தோணி கடந்துவிடாதா உயிர்தொடும் தூரத்தை?”

 ந.கவிதா

முன்னுரையிலிருந்து...


ஒரு கோயில் நகரத்தில் 8 வயதுச் சிறுமியாகப் பட்டுப் பாவாடை சட்டையுடன் குதிரை வண்டியில் அப்பாவும் அவளும் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்பா வெண்பட்டு வேஷ்டியும் பட்டு அங்கவஸ்திரமும் அணிந்திருக்கிறார். அவர்கள் சென்றுகொண்டிருக்கும் குதிரை வண்டிக்கு முன்னும் பின்னுமாக ஒரு பச்சைக் கிளி சுற்றிச் சுற்றி வருகிறது. அப்பா அதை அவளுக்குச் சுட்டிக்காட்டுகிறார். அவள் அதைக் கூப்பிடுகிறாள். அது பறந்து உள்ளே வந்து அவளுடைய மடியில் உட்கார்ந்துகொள்கிறது. அவள் அதனுடன் கொஞ்சி விளையாடுகிறாள். குதிரை வண்டி சன்னதித் தெருவில் நிற்கிறது. அவர்கள் இறங்கும்போது, கிளி பறந்து செல்கிறது. கமலி அதையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். அங்கு வரிசையாக ஒரு ஓரத்தில் பல மூதாட்டிகள் பிச்சைத் தட்டுடன் அமர்ந்திருக்கிறார்கள். பறந்து சென்ற கிளி ஒரு மூதாட்டியின் தோளில் போய் அமர்கிறது. கமலி அந்த மூதாட்டியைப் பார்க்கிறாள். அது அவளுடைய அம்மா. அடையாளம் தெரியாமல் மெலிந்து தேசலாக அமர்ந்திருக்கிறார். அவளைப் பார்த்துக் கைகளால் அழைக்கிறார். அவள் அம்மா என்று பதறியபடி அவரை நோக்கி ஓடுகிறாள்.

- நாவலிலிருந்து...


சி.மோகன், 1952ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மதுரையில் பிறந்தவர்.

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இலக்கியம், கலை, சிந்தனை ஆகிய தளங்களில் கலை நம்பிக்கையோடு செயல்பட்டு வருபவர். இவருடைய பார்வைகளும் மதிப்பீடுகளும் தமிழ் இலக்கியச் 

சூழலில் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. படைப்பு ரீதியிலான பார்வைகளையும், சிறுபத்திரிகை இயக்கத்தின் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இவருடைய ஆளுமை நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, உரையாடல், நூல் பதிப்பு எனப் பன்முகத் தன்மை கொண்டது. உலக இலக்கியங்களில் ஆழ்ந்த வாசிப்பு கொண்டவர். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய கலைகளிலும் கவனத்தைச் செலுத்தி வருபவர்.

இலக்கியக் கோட்பாட்டாளர், பிரதி மேம்படுத்துபவர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என தொடர்ந்து சீராக இயங்கிவருவதன் மூலம் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு வலுவாகப் பங்காற்றிக் கொண்டிருப்பவர். சிறந்த உரையாடல்காரராக அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் பாதிப்பு நிகழ்த்துபவர்.


No comments:

Post a Comment